×

விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆசிஷ் கைது: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆஜரானார்.!

லக்னோ: லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா 11 மணி நேர விசாரணைக்கு பிறகு, போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பாஜவினர் கார் மோதி 4 விவசாயிகளும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் 4 பாஜவினரும் அடித்துக் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது மோதிய காரில், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது உபி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்ய உபி போலீசார் எந்த முயற்சியும் எடுக்காததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, ஆசிஷ் மிஸ்ராவை விசாரணைக்கு ஆஜராகும்படி லக்கிம்பூர் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் ஆஜராகாத ஆசிஷ் மிஸ்ரா, நேற்று காலை 11 மணிக்கு லக்கிம்பூர் கேரி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜாரனார். அவர் வருவதையொட்டி, காவல் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். எம்எல்ஏ ஒருவருடன் பைக்கில் வந்த ஆசிஷ் மிஸ்ராவை, போலீஸ் படை சூழ பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். உபி சிறப்பு புலனாய்வு பிரிவு டிஐஜி அகர்வால் தலைமையில் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு வரை 9 மணி நேரம் நீடித்தது. அப்போது,‘உங்களுக்கு சொந்தமான வாகனம் வன்முறை நடந்த இடத்திற்கு சென்றது ஏன்? வன்முறை நடந்த அக்டோபர் 3ம் தேதி பிற்பகல் 2.36 மணியிலிருந்து 3.30 மணி வரை நீங்கள் எங்கிருந்தீர்கள்?’ என பல கேள்விகள் ஆசிஷ் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது.  அதற்கு அவர், ‘வன்முறை நடந்த போது நான் லக்கிம்பூரில் இல்லை. பன்பிர்பூரில் இருந்தேன். நான் இல்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்’ என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பன்பிர்பூரில் இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் தரவில்லை. பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆசிஷ் மிஸ்ரா திணறியதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் போது ஆசிஷ் மிஸ்ராவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இரவு 11 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்துள்ளதாக அறிவித்தனர்….

The post விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆசிஷ் கைது: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆஜரானார்.! appeared first on Dinakaran.

Tags : Union ,Ashish ,Supreme Court ,Lucknow ,Union Minister of State for Home Affairs ,Ajay ,Lakhimpur ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற தீர்ப்பு ED, ஒன்றிய அரசின்...